விளையாட்டு

"நான் நம்பர்களுக்காக விளையாடுவதில்லை, அணி வெல்வதற்காகவே விளையாடுகிறேன்"- இஷாந்த் சர்மா!

"நான் நம்பர்களுக்காக விளையாடுவதில்லை, அணி வெல்வதற்காகவே விளையாடுகிறேன்"- இஷாந்த் சர்மா!

jagadeesh

தான் இந்திய அணி போட்டியை வெல்வதற்காகவே விளையாடுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறுகிறது. ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்தும் மற்றொன்றில் இந்தியாவும் வென்றுள்ளது. இந்நிலையில் தொடரில் முன்னிலை பெறுவதற்காக இந்தப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டி. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி வங்கதேசம் அணிக்கு எதிராக இந்தியா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏற்கெனவே விளையாடி இருக்கிறது. இந்தப் போட்டி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலமாக பேசிய இஷாந்த் சர்மா "எனக்கு லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தனித்துவமாக ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நான் எப்போதும் அணியின் வெற்றிக்காகவே விளையாடுவேன். என்னால் முடியும் வரை தொடர்ந்து விளையாடுவதே எனக்கு முக்கியம். உங்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும்போது அதை திரும்பிப் பார்க்கும்போது 100 டெஸ்ட் விளையாடியது எல்லாம் சாதனையாக தெரியும்" என்றார்.

மேலும் "உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சாதனையெல்லாம் எனக்கு வெறும் நம்பர்தான். நான் இந்த நம்பர்களுக்காக விளையாடவில்லை, வெல்வதற்காகவே விளையாடுகிறேன். என்னுடைய அணியை எப்படி வெற்றிப்பெற வைக்கலாம் என்பதே என்னுடைய நோக்கமாக இருக்கும். என்னுடைய அணி சிக்கலில் இருக்கும்போது விக்கெட் எடுத்து எப்படி அணியை காப்பாற்றுவது என்பதிலேயே என்னுடைய முழு கவனமும் இருக்கும்" என்றார் இஷாந்த் சர்மா.

மேலும் பேசிய இஷாந்த் சர்மா "ஆனாலும் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் ஜாகீர் கானிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எப்போதும் உடற்தகுதியின் அவசியத்தை எனக்கு சொல்லிக்கொண்டு இருப்பார். அதுவும் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு உடற்தகுதி எந்தளவுக்கு முக்கியம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதைதான் இப்போது நான் என்னுடைய அணியின் வீரர்களுக்கும் சொல்லி வருகிறேன். அப்போதுதான் நாட்டுக்காக வெகுகாலம் விளையாட முடியும்" என்றார் அவர்.