கிரிக்கெட் விளையாட்டில் பணம் முக்கியமில்லை என்றால் இந்த விளையாட்டில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என தெரியவில்லை என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
"Cricket Monthly" ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அவர் "கிரிக்கெட் விளையாட்டு குறித்தும் அதில் ஈட்டப்படும் பணம் குறித்தும் நானும் குருணால் பாண்ட்யாவும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். இதில் ஏராளமான பணம் கிடைக்கிறது என்பதால் நாங்கள் எப்போதும் பறப்பதற்கு ஆசைப்பட்டதில்லை. எங்கள் கால்கள் எப்போதும் தரையிலேயே இருக்கின்றது. அதற்காக பணம் முக்கியமில்லை என சொல்லவில்லை. பணம் ஈட்டுவது நல்லது. அது பல மாற்றங்களை செய்யும். அதற்கு நானே ஓர் உதாரணம். பணம் இல்லையென்றால் இந்நேரம் ஏதோ ஒரு பெட்ரோல் பங்கில் நான் வேலை செய்துக்கொண்டு இருந்திருப்பேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "நான் இதை நகைச்சுவைக்காக சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை குடும்பம்தான் எனக்கு முக்கியம். அவர்களுக்கு தேவையானதை நாம் செய்தால் நமக்கு நல்ல குடும்பம் அமையும். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் இருப்போம். 2019 ஆம் ஆண்டில் ஒரு மூத்த வீரருடன் உரையாட நேர்ந்தது. அப்போது அவர் "இளம் வீரர்களுக்கு பணம் கொடுக்க கூடாது" என்றார். நான் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். ஒரு கிராமத்தில் இருந்து வரும் வீரருக்கு பணம் மிகவும் முக்கியமானது. அவருக்கு அது தேவைப்படாவிட்டாலும் அவரின் பெற்றோருக்கு தேவைப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்ட்யா "பணம் ஒரு வீரருக்கு உந்துதல் சக்தியாக இருக்கும். அவர் மேலும் மேலும் சிறப்பாக விளையாட பணமே காரணமாக அமையும். கிரிக்கெட் விளையாட்டில் பணம் இல்லையென்றால் எத்தனை பேர் இந்த விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் எனத் தெரியவில்லை. விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பணத்தை பற்றி சிந்திக்க கூடாது என்ற பொது புத்தி சமுதாயத்தில் இருக்கிறது. அது ஒரு தவறான கண்ணோட்டம்" என்றார் அவர்.