ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியதற்கு பேட்டிங் சொதப்பியதுதான் காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுப் போட்டியின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் மோதி ன. இதில் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்று இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
தோல்விக்குப் பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது, ‘சந்தோசமான மனநிலையில் இல்லை. நாங்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒரு கேப்டனாக நானும் சரியாக ஆடவில்லை. நான் நன்றாக ஆடியிருக்க வேண்டும். எங்கள் வீரர்களும் நிறைவாக விளையாடவில்லை. நான், அணியை சரியாக வழிநடத்தவில்லை என்றே நினைக்கிறேன். எங்கள் அணியின் பேட்டிங் சரியாக அமையவில்லை. பீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அனைத்து விதத்திலும் எங்கள் அணி தோல்வி அடைந்துவிட்டது.
பஹர் ஜமான் எங்கள் அணியின் முக்கியமான வீரர்.
அவர் இந்த தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஷதாப்கான் காயமடைந்த நிலையில் விளையாடினார். இருந்தாலும் சிறந்த அணியை வெல்லவேண்டும் என்றால் நாங்களும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை சொதப்பியதுதான் வெளியேற காரணமாக அமைந்துவிட்டது. இது வருத்தமாகவே இருக்கிறது. ஷாகின் அப்ரிதி எங்களின் பிளஸ் பாயின்ட்’ என்றார்.