குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் காரணமாக ஐபிஎல் தொடரின்போது என்னால் சரியாக தூங்க முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அஸ்வின். நடப்பு ஐபிஎல் தொடரின்போது, அஸ்வின் தன் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்பு கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு ஐபிஎல் வீரர்களுக்கும் ஏற்பட்டதால் டி20 தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அஸ்வின் பேட்டியளித்துள்ளார். அதில் "என் குடும்பத்தில் அநேகமாக அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் எப்படியோ அவர்கள் குணமடைந்துவிட்டனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின்போது 8 முதல் 9 நாள்கள் நான் சரியாக தூங்கவில்லை. அது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது" என்றார் அவர்.
மேலும் "இதன் காரணமாக நான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வீடு திரும்ப முடிவு செய்தேன். வீடு திரும்பும்போது என்னால் மீண்டும் பழையபடி கிரிக்கெட் விளையாட முடியுமா என்று கூட தோன்றியது. ஆனாலும் அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவு சரியானதாகவே எனக்கு தோன்றியது. என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக சரியானபோது மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கலாமா என எண்ணினேன். ஆனால் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது" என்றார் அஸ்வின்.