இன்னும் இரண்டு வருடங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடுவேன் என்று வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறினார்.
இந்திய- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிஷ் நெஹ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். 38 வயதான இவர், அணியில் மீண்டும் இடம்பிடித்திருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் அணியில் மீண்டும் இடம் பிடித்திருப்பது பற்றி நெஹ்ரா அளித்துள்ள பேட்டியில், ‘காயம் காரணமாக பல போட்டிகளில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் பிட்னஸ் பிரச்னைதான். இதனால் அதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்படி கவனம் செலுத்தியதன் காரணமாகத்தான் இப்போது அணியில் இடம்பிடித்துள்ளேன். இன்னும் இரண்டு மூன்று வருடம் அணியில் தொடர்வேன் என நினைக்கிறேன். 38-39 வயதில் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு இது எளிமையான விஷயம் இல்லை. இருந்தாலும் சிறப்பாக ஆட முயற்சிப்பேன். புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். பாண்ட்யாவும் திறமையான வீரர். இவர்களுக்குத் தேவைப்பட்டால் அலோசனை வழங்குவேன்’ என்றார்.