‘உடல் தகுதி நூறு சதவிகிதம் சரியாக இல்லாததால் ஓய்வை நானே விரும்பிக் கேட்டேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.
இலங்கைக்கு எதிரான தொடரில், முதல் இரண்டு டெஸ்டில் ஆடும் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது. ஜூன் மாதம் தொடங்கிய சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார் பாண்ட்யா. ’அவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவருக்கு பெரிய அளவில் காயப்பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக, ஓய்வு அளிக்கப்படுகிறது’ என கிரிக்கெட் வாரியம் கூறியது. அதோடு ஜனவரியில் நடக்கும் தென்னாப்பிரிக்க தொடருக்கு அவரை பிரெஷ்சாக களமிறக்கும் நோக்கத்திலும் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
முதலில் விளையாடுவார் என அறிவித்துவிட்டு திடீரென்று பணிச்சுமையை காரணம் காட்டி அவருக்கு ஓய்வு கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, ’தொடர்ந்து விளையாடி வருவதால் எனக்கு நூறு சதவிகிதம், சரியான உடல் தகுதி இல்லை. அதனால் கிரிக்கெட் அணி நிர்வாகத்திடம் நானே ஓய்வை கேட்டேன். உடல் தகுதி சரியாக இருக்கும்போது கண்டிப்பாக ஆட்டத்தை தொடர்வேன். இந்த ஓய்வு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த ஓய்வை எனது உடல் தகுதியை மேம்படுத்த பயன்படுத்திக்கொள்வேன். தென்னாப்பிரிக்கத் தொடரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதில் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.