விளையாட்டு

'உலகின் No.1 வீரர் நானே; எனக்கு அடுத்துதான் விராட் கோலி' - மார்தட்டும் பாகிஸ்தான் வீரர்!

JustinDurai

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை விட தன்னுடைய சாதனை சிறப்பான நிலையில் உள்ளதாக சொல்கிறார் பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர்.

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, கடந்த ஏழு போட்டிகளில் 3 சதங்கள் அடித்து உள்ளார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் பதிவு செய்துள்ள 49 சதங்கள் என்ற எண்ணிக்கையை கோலி சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை விட தன்னுடைய சாதனை சிறப்பான நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து குர்ரம் மன்சூர் கூறுகையில், ''நான் என்னை விராட் கோலியுடன் ஒப்பிடவில்லை. உண்மை என்னவெனில், 50 ஓவர் கிரிக்கெட்டில், டாப்-10ல் யார் இருந்தாலும், நான்தான் உலகின் நம்பர்-1. எனக்குப் பிறகே கோலி உள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது ரன்ரேட் அவரை விட சிறப்பாக உள்ளது. அவர் ஒவ்வொரு 6 இன்னிங்ஸிலும் ஒரு சதம் அடித்தார். நான் ஒவ்வொரு 5.68 இன்னிங்ஸிலும் சதம் அடிக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் எனது சராசரியான 53 அடிப்படையில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளேன். கடந்த 48 இன்னிங்ஸ்களில் 24 சதங்களும் அடித்துள்ளேன். 2015 முதல் இப்போது வரை, பாகிஸ்தானுக்காக யார் ஓபன் செய்திருந்தாலும், அவர்களில் நான் இன்னும் முன்னணி வீரராகவே இருக்கிறேன். தேசிய டி20யில் அதிக சதம் அடித்தவரும் நானே. ஆனாலும் நான் புறக்கணிக்கப்படுகிறேன். அதற்கான உறுதியான காரணத்தை இதுவரை யாரும் என்னிடம் கூறவில்லை” என்றார்.

குர்ரம் மன்சூர் கடைசியாக 2016ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். அதன்பின் உள்நாட்டு தொடரில் ஆடிவரும் மன்சூர், முதல் தர போட்டிகளில் 12,000 ரன்களுக்கு அதிகமாகவும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சுமார் 8,000 ரன்களுக்கு அதிகமாகவும் அடித்துள்ளார்.