Model Image reuters
விளையாட்டு

பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?

"எப்படியிருப்பினும் வெற்றி என்பது வெற்றிதான்" (A win is a win) என்றும் ஜோனா தனது நிலைப்பாட்டை ஆதரித்துப் பதிவிட்டுள்ளார்.

Prakash J

பெய்ஜிங்கில் நடைபெற்ற 'ஹைராக்ஸ்' (HYROX) உடற்தகுதிப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோனா வியட்ரிசிக் (Joanna Wietrzyk) உடல் உபாதை காரணமாக ஆடையில் மலம் கழித்த பிறகும் பந்தயத்தைத் தொடர அனுமதித்தது குறித்து ஹைராக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

பெய்ஜிங்கில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற 'ஹைராக்ஸ்' (HYROX) உடற்தகுதிப் போட்டியின்போது, 22 வயதான ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோனா வியட்ரிசிக் (Joanna Wietrzyk), பெண்கள் புரோ' பிரிவில் பங்கேற்றார். இந்தப் போட்டியின் போது அவருக்கு கடுமையான குடல் உபாதை ஏற்பட்டது. தவிர, பந்தயத்தின் நடுவில் அவர் தன் ஆடையில் மலம் கழித்ததாக அமைப்பாளர்களுக்குத் தெரிய வந்தது. இருப்பினும், அவர் பந்தயத்தைப் பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டு 1:01:23 நேரத்தில் பந்தயத்தை முடித்து முதலிடத்தைப் பிடித்தார். இந்தச் சம்பவம் பாதுகாப்புத் தரங்கள் குறித்த கடும் எதிர்ப்பைத் தூண்டியதுடன், விதி மாற்றங்களுக்கும் இட்டுச் சென்றது. பிற போட்டியாளர்களும் இணைந்து பயன்படுத்தும் மைதானம் மற்றும் உபகரணங்களில் சுகாதாரப் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், அவர் பந்தயத்தைத் தொடர அனுமதித்தது குறித்து ஹைராக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஓர் அறிக்கையில், ஹம்பர்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச தடகள பிராண்டின் இணை நிறுவனர் மோரிட்ஸ் ஃபர்ஸ்டே, "இந்தச் சூழ்நிலையை நாங்கள் கையாள வேண்டிய விதத்தில் கையாளவில்லை என்று கருதிய அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பந்தயத்தின்போது உடனடியாக எதிர்வினையாற்றாதது ஹைராக்ஸ் செய்த தவறு" என்று ஒப்புக்கொண்டதுடன், தனது விதிகள் மற்றும் போட்டி நடைமுறைகளில் உடனடி மாற்றங்களையும் அறிவித்துள்ளார்.

”இந்த நிகழ்விலிருந்து தொடர்ந்து பாடம் கற்றுக்கொண்டு, தங்களது செயல்முறைகளை மேம்படுத்த நிறுவனம் செயல்படும்” என்று ஃபர்ஸ்டே தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தீவிரமான உடற்பயிற்சி சூழலில் இத்தகைய சவால்கள் ஏற்படுவது சகஜம் என்றும், "எப்படியிருப்பினும் வெற்றி என்பது வெற்றிதான்" (A win is a win) என்றும் ஜோனா தனது நிலைப்பாட்டை ஆதரித்துப் பதிவிட்டுள்ளார்.