விளையாட்டு

167 ரன்கள் குவித்த சென்னை : இலக்கை எட்டுமா ஹைதராபாத் ?

webteam

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 167 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டு பிளசிஸ் எதிர்பாராத விதமாக ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

மறுபுறம் முதன் முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய சாம் கர்ரன் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் என 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வாட்ஸன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். 14 ஓவர்கள் வரை சீரான வேகத்தில் பேட்டிங் செய்த இருவரும் அதன்பின்னர் அதிரடியை தொடங்கினர்.

அப்போது கலீல் அகமது வீசிய பந்தில் அம்பத்தி ராயுடு 41 (34) ரன்களில் கேட்ச் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து வாட்ஸனும் 42 (38) ரன்களில் நடையைக்கட்டினார். அதன்பின்னர் தோனியும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஒரு அதிரடியான ஆட்டத்திற்கு தயாராகினார். ஆனால் 13 பந்துகளை சந்தித்த அவர் 21 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிராவோ ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்களை விளாச, 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் சந்தீப் ஷர்மா, கலீல் அகமது மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.