விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலம் 2ம் நாள்: ஏகபோகமாக விலைபோன ஏய்டன் மார்க்ரம் - எந்த அணி?

ஐபிஎல் மெகா ஏலம் 2ம் நாள்: ஏகபோகமாக விலைபோன ஏய்டன் மார்க்ரம் - எந்த அணி?

JustinDurai

15-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று முதல் ஆளாக தென்னாப்பிரிக்கா வீரர் ஏய்டன் மார்க்ரமை  ரூ.2.60 கோடிக்கு ஹைதராபாத் அணி எடுத்துள்ளது.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் முதலில் 600 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் ஆர்வமுடன் எடுத்து வருகின்றனர். முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன. வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

மெகா ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று முதல் ஆளாக தென்னாப்பிரிக்கா வீரர் ஏய்டன் மார்க்ரமை  ரூ.2.60 கோடிக்கு ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. அடிப்படை விலை 1 கோடி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அணி ரூ. 2.60 கோடிக்கு எடுத்துள்ளது. இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே அடிப்படையான விலையான 1 கோடிக்கு கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இயான் மார்கன், மார்னஸ் லபுஷானே,  டேவிட் மலான், ஆரோன் பின்ச் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

அதேபோல கடந்தாண்டு மும்பை இந்தியன்ஸ்க்காக விளையாடிய சவுரப் திவாரியை யாரும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல இந்தியாவின் புஜாராவையும் இந்தாண்டு யாரும் ஏலம் எடுக்கவில்லை. கடந்தாண்டு புஜாராவை சிஎஸ்கே அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.