உலகக் கோப்பையில் நேற்றைய போட்டியில் இலங்கை வெற்றிப்பெற்றதன் மூலம் உலகக் கோப்பை மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நேற்று லீட்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணி வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அணி வெற்றிப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் இலங்கை அணி 6 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 3 தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது.
அத்துடன் இலங்கை வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்திற்கு போட்டி அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து 9 புள்ளிகளுடன் நியூசிலாந்தும், 8 புள்ளிகளுடன் இங்கிலாந்தும், 7 புள்ளிகளுடன் இந்தியாவும் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. இவற்றில் இந்திய அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. எனவே இந்திய அணி முதல் நான்கு இடத்தில் இடம்பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இங்கிலாந்து அணியை பொருத்தவரை நேற்றைய போட்டியில் வெற்றிப் பெற்றிருந்தால் 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கலாம். ஆனால் நேற்றைய போட்டியில் தோற்றது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு இன்னும் மூன்று போட்டிகளில் மிச்சமுள்ளன. அவற்றில் இங்கிலாந்து அணி இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த மூன்று அணிகளை இங்கிலாந்து அணி உலகக் கோப்பை போட்டிகளில் கடந்த 27 ஆண்டுகளாக தோற்கடித்ததே இல்லை. எனவே இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை தொடரில் பெரிய சவால் காத்திருக்கிறது.
மேலும் இலங்கையின் வெற்றி பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் நான்காவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பை அதிகபடுத்தியுள்ளது. ஆகவே உலகக் கோப்பை தொடரில் இனிவரும் போட்டிகள் அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.