விளையாட்டு

இக்கட்டான சூழலில் கோலிக்கு தோனி கொடுத்த ‘ஐடியா’

இக்கட்டான சூழலில் கோலிக்கு தோனி கொடுத்த ‘ஐடியா’

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், சிக்கலான நேரத்தில் கேப்டன் விராட் கோலிக்கு, மகேந்திர சிங் தோனி ஆலோசனை கொடுத்தார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணியின் வெற்றி கேள்வி குறியாக இருந்தது. 

பின்னர், நியூசிலாந்து அணி 68 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடியது. பும்ரா, சாஹல் மற்றும் புவனேஸ்குமாரின் அபாரமான பந்துவீச்சால் 3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு சற்றே நம்பிக்கை ஏற்பட்டது. நான்கு மற்றும் ஐந்தாவது ஓவர்களில் தலா 10 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. 

இருப்பினும் 2 விக்கெட்டுகள் விழுந்தது. 6-வது ஓவரை வீசிய சாஹல் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. யாராவது ஒருவர் மட்டுமே 3 ஒவர்கள் வீச முடியும் என்பதால் அடுத்த இரண்டு ஓவர்களில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் இருவருக்கு வாய்ப்பு அளிக்க முடியாது. இருவரில் ஒருவருக்கு மட்டும் ஒவர் கொடுக்க முடியும். அதுவும் கடைசி ஓவராகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் 7-வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டாலும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. 

நியூசிலாந்து அணி 7 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் கடைசி ஓவரை பும்ராவுக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்தது. கடைசி ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டும் எடுக்கப்பட்டாலும், 3-வது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார் கிராண்ட்தோம். அதற்கு அடுத்த பந்தில் பாண்ட்யா ஓயிட் வீசினார். இதனால் கடைசி 3 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரசிகர்கள் பதற்றத்தின் உச்சிக்கே சென்றனர். ஆனால், கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து பாண்ட்யா அசத்தினார். இதனால், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

ஒருவேளை கடைசி ஓவரில் நியூசிலாந்து 19 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தால் கடைசி ஓவரை பும்ரா வீசாதது குறித்து பெரிய சர்ச்சை எழும்பி இருக்கும். ஆனால், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை பும்ராவிடம் வழங்க கோலிக்கு முன்னாள் கேப்டன் தோனியும், ரோகித் சர்மாவும் ஆலோசனை வழங்கினர். இந்த யோசனை இந்திய அணிக்கு வெற்றியையும் ஈட்டி தந்தது.