ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக காபா மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. 1988 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியதே கிடையாது. அந்த அளவிற்கு இந்த மைதானம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால் அதே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை பணிய செய்துள்ளது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரின் மனதிலும் ஆறாத வடுவாக படிந்தது. அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது டிக்ளர் செய்தது. அது இந்திய அணியின் மோசமான டெஸ்ட் ஆட்டமாகவும் அமைந்தது. இருப்பினும் அந்த தோல்வியை எண்ணி தளர்ந்திடமால் இந்திய அணி அடுத்த போட்டியிலேயே கம்பேக் கொடுத்தது. அதன் மூலம் வெற்றி பெற்று தொடரை 1 - 1 என சமன் செய்தது.
தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் போராடி ஆட்டத்தை டிரா செய்தது. அதன் மூலம் இந்த தொடரை உயிர்ப்போடு வைத்திருந்ததோடு நான்காவது டெஸ்டில் இந்தியா விளையாடியது. அனுபவ வீரர்கள் காயத்தினால் அவதிப்பட்ட போதும் கில், பண்ட், சிராஜ், தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், சைனி என இளம் இந்திய வீரர்கள் சரிவிலிருந்த அணியை மீட்டதோடு சம்பியனாகவும் ஆக்கியுள்ளனர்.
இந்திய அணியின் இந்த பர்பாமென்ஸை புகழும் வகையில் அடிலெய்ட் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் போர்டையும், காபா டெஸ்டின் நிலையையும் ஒப்பிட்டு ‘எப்படி இருந்த இந்தியா, இப்படி ஆகியிருக்கு பாருங்க’ என ஐசிசி ட்வீட் செய்துள்ளது.