ms dhoni PT web
விளையாட்டு

‘தோனி’யும் ரஜினியைப் போலத்தான்..! ஒரு கிரிக்கெட்டர் மக்களின் நாயகனாக உருவானது எப்படி?

எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கம் இருப்பது போலவே ஒரு முடியும் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்க உள்ளது தோனி எப்படி எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார், மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்காத ஒன்று தோனிக்கு மட்டும் எப்படி கிடைத்தது.

Rajakannan K

மகேந்திர சிங் தோனி.. இது வெறும் பெயர் மட்டுமல்ல.. அது ஒரு எமோஷன். ஒரு பெயரை சொன்னவுடன் உங்களுக்கு உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி உண்டானாலே நிச்சயமாக அவர் உங்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்துவிட்டார் என்றே அர்த்தம். அப்படி கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்த பெயர் தான் எம்.எஸ்.தோனி. ஒரு கிரிக்கெட்டர் என்பதையும் தாண்டி மக்களின் மனதில் தோனி எப்படியோ இடம்பிடித்துவிட்டார். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வலம் வந்த பல ஜாம்பவான்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு என்றே சொல்லலாம்.

MS Dhoni

இதில் கடந்த சில வருடங்களாக வியாபாரம் என்ற பெயரில் தோனியை வைத்து கல்லா கட்ட நினைத்து அதனால் ஏற்பட்ட சில எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடலாம். ஏனெனில் தோனியின் கிரிக்கெட் கேரியரில் அவருக்கான அந்திம காலம் இது. நீண்ட தன்னுடைய கேரியரில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறிய அவர் எப்படி விடைகொடுப்பது என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கம் இருப்பது போலவே ஒரு முடிவும் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்க உள்ளது தோனி எப்படி எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார், மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்காத ஒன்று தோனிக்கு மட்டும் எப்படி கிடைத்தது.

தோனியும் ரஜினியைப்போல தான்.. இலக்கணங்களை உடைத்தவர்!

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்று ஒரு இலக்கணம் இருந்தது. வெள்ளைத் தோலுடன் இருக்க வேண்டும். முகவாட்டமாக இருக்க வேண்டும் என பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.. அதனையெல்லாம் உடைத்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த். கமல்ஹாசன் ஹீரோ ஆவதற்கும், ரஜினி ஹீரோ ஆவதற்கும் ஆன வித்தியாசம்தான் கிரிக்கெட் உலகில் அதற்கு முன்பு இருந்தவர்களுக்கும் தோனி ஒரு ஸ்டார் ஆக மாறியதற்கும் உள்ள வித்தியாசம்.

kamal Rajini Sri Priya

சவுரவ் கங்குலி, அஜய் ஜடேஜா என கிரிக்கெட் உலகில் இருந்த பெரும்பாலானவர்கள் பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இப்படி ஏதும் இல்லாமல் ராஞ்சி என்ற சிறிய நகரத்தில் நடுத்தர வர்க்க குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்தான் தோனி.

இன்று நடராஜன் இந்திய கிரிக்கெட்டில் இடம்பிடித்ததை எப்படி நாம் கொண்டாடுகிறோமோ அப்படித்தான்.. நடராஜன் கிராமத்து பின்னணியில் இருந்து வந்து சாதித்தது எப்படி பெரிய விஷயமோ அப்படித்தான் அன்று இரண்டாம் கட்ட நகரங்களில் இருந்து வந்து ஒருவர் சாதிப்பது. நீண்ட தலைமுடியுடன் கூடிய அவரது உருவத்தோற்றமும், பயம் இல்லாத பேட்டிங் முறையுமே ஆரம்பத்தில் பலரையும் கவர்ந்துவிட்டது. யார்ரா இவன் இப்படி இருக்கான் என்று பலரும் உச்சிமுகர்ந்து பார்த்தார்கள். பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்து அடித்த இரு செஞ்சுரியின் மூலம் தன்னுடைய வருகையை கெத்தாக உலகிற்கு பறைசாற்றியவர் தோனி. சச்சின் போலவோ, விராட் போலவோ ஒரு ஆர்த்தோடக்ஸ் பேட்ஸ்மேன் அல்ல தோனி. ஆனால், தோனி களத்தில் இருக்கும் வரை எதிரணிக்கு வெற்றி சாத்தியமில்லை என்று உணர்வை கொடுத்தவர்.

தன்னைப்போலவே ஒருவர் கிரிக்கெட் உலகில் சாதித்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வே ரசிகர்களை எல்லாவற்றையும் தாண்டி தோனியை கொண்டாட வைத்தது.

”என் வழி தனி வழி”.. தோனியின் அணுகுமுறையே மிரட்சிதான்!

தோனியை எல்லோருக்கும் பிடிக்க காரணமே அவர் களத்தில் காட்டிய அணுகுமுறைதான். இந்திய கேப்டன்களில் பெரும்பாலானோர்கள் மிகவும் அக்ரஷிவ் அணுகுமுறையை கொண்டவர்கள்தான். கங்குலி, விராட் கோலி என சாதித்த பல கேப்டன்கள் அப்படித்தான் இருந்தார்கள். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒடிஐ உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 5 ஐபிஎல் கோப்பை என பல சாதனைகளை நிகழ்த்தி உச்சம் தொட்டவர் தான் தோனி. ஆனால், வெற்றியோ தோல்வியோ களத்தில் அவரது அணுகுமுறை பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வெற்றிப்பெற்றால் பெரிதாக கொண்டாடி தீர்த்ததும் இல்லை.. தோல்வி அடைந்தால் விரக்தி ஆகி மனம் உடைந்ததும் இல்லை. கோப்பையை வெற்றி மற்ற வீரர்களிடம் கொடுத்துவிட்டு கூலாக ஓரமாக ஒதுங்கி நிற்கும் அந்த சுபாவம் தான் பல ரசிகர்களின் மனதில் நங்கூரம் போல் அவரது பெயரை பொறித்தது.

MS Dhoni

வீரர்களிடம் அவர் வேலை வாங்கும் விதமே அலாதியானது. இதனை அவரின் கேப்டன்ஷியில் விளையாடிய பல வீரர்கள் சிலாகித்து கூறியதை பல முறை நாம் கேட்டிருக்கிறோம். சிறந்த தலைமை என்பது அவர் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்வது என்பதை தாண்டி அவர் பார்வையிலும் உடல் அசைவிலுமே மற்ற வீரர்களை புரிந்து கொள்ள வைப்பதுதான். இந்த மேஜிக்கை அவர் நிகழ்த்திக் கொண்டே இருந்தார்.

MS Dhoni

களத்தில் பெரிதாக யாரையும் அவர் கடிந்து கொண்டதே இல்லை. டீம் மீட்டிங்கிலும் அவர் பெரிதாக பேசுவதும் இல்லை. எல்லாவற்றையும் எளிமையாக மாற்றி வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முழுவாய்ப்பையும் கொடுத்து வெற்றிக்கு பயன்படுத்துவார்.

தோனிக்கு முன்பு தனிப்பட்ட வீரர்களின் திறமையை பொறுத்தே வெற்றி அமையும். சில வீரர்கள் ஜொலித்தால் மட்டும் இந்திய அணியின் வெற்றி சாத்தியம் ஆகும். மற்ற நேரங்களில் படுதோல்வியை சந்திக்கும். ஆனால், தோனி வந்தபிறகும் இறுதிவரை போராடும் குணத்தை கொடுத்தார், அவர் ஆங்கர் இன்னிங்ஸ் விளையாடி ரெய்னா, யுவராஜ் போன்ற வீரர்களை ஆடவைத்து வெற்றிகளை குவித்தார். கேப்டன் ஆவதற்கு முன்பு இருந்த அவரது அக்ரஷிவ் குணத்தை மாற்றி நிதானமான அணுகுமுறைக்கு மாறினார். ஒரு மேட்சை ஒரு நிபுணரை போலவே கணித்து கால்குலேட் ஆக ஆடக்கூடிய வல்லமை பெற்றிருந்தார். அதற்கு தகுந்தாற்போல் அணியையும் வழிநடத்தினார்.

MS Dhoni

எப்படி ரிக்கிப்பாண்டிங்கைவிட ஸ்டீவ் வாக் சிறந்த கேப்டன் என்று சொல்கிறோமோ அப்படித்தான் தோனியும். வெற்றிக்காக எதனையும் செய்யக்கூடியவர் பாண்டிங். அதற்காக கிரிக்கெட்டின் ஆன்மாவையே விலையாக கொடுப்பார்கள். ஆனால், தோனி உருவாக்கியது கிரிக்கெட்டின் அதாவது ஒரு விளையாட்டின் ஆத்மார்த்த உணர்வை நிலைநாட்டி வெற்றிகளை குவித்தது. தோனியைவிட அதிக வெற்றிகளை குவித்தவர் விராட் கோலி. ஆனால் ஏன் தோனி அதிகம் கொண்டாடப்படுகிறார் என்பதுதான் அந்த வித்தியாசம்.

விக்கெட் கீப்பிங் மேஜிக் - கிரிக்கெட்டை ஒரு கலையாக மாற்றியவர் தோனி!

தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர். டி20 கிரிக்கெட்டிலும் பேட்டிங்கில் ஜொலித்தவர். கேப்டன்ஷியில் சாதனை மேல் சாதனைகள் புரிந்தவர். ஆனால், இவையெல்லாவற்றையும் தாண்டி தோனியின் விக்கெட் கீப்பிங் திறமைக்கே பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ஆம், ரொனால்டோ மிகப்பெரிய கால்பந்தாட்ட வீரர்தான். ஆனால், கல்பந்தாட்டத்தை ஒரு கலை ஆக மாற்றி தன்னுடைய கால்களில் மேஜிக் செய்தவர்தான் மெஸ்ஸி. அதனால், ரொனால்டோவை விட மெஸ்ஸிக்கு கூடுதலான ரசிகர் பட்டாளம்.

அப்படித்தான் கிரிக்கெட்டை விளையாட்டையும் தாண்டி ஒரு ஆர்ட் ஆக மாற்றியவர் தோனி. குறிப்பாக தன்னுடைய விக்கெட் கீப்பிங் பணியில் அதனை மிகச் சிறப்பாகவே செய்தார். மின்னல் வேக ஸ்டம்பிங், ஸ்டம்பை பார்க்காமலே ரன் அவுட் செய்வது என அவர் செய்த மேஜிக்குகள் ஏராளம். பேட்ஸ்மேன் க்ரிஸில் கால்வைக்கும் அந்த டைமிங்கை கணித்து யாருமே நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அவரது ஸ்டம்பிங் இருக்கும். விக்கெட் கீப்பிங்கில் இருந்து கொண்டே ஸ்பின்னர்களுடன் அவர் உரையாடும் விதமே அலாதியானது.

கிரிக்கெட்டை தாண்டி தோனியை கொண்டாடிய மக்கள்!

நாம் மேற்சொன்ன பல காரணங்கள் தோனியை மக்கள் கொண்டாட காரணமாக அமைந்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி பல விஷயங்கள் தோனியை பிடித்துப்போக காரணமாக அமைந்தது. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களை தாண்டி அங்கே வேலை செய்யும் ஊழியர்கள் உட்பட பலரிடமும் தோனி எப்பொழுதுமே நெருக்கமாக இருப்பார். இது அவருடைய இயல்பாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது. தோனியிடம் மற்ற ஜாம்பவன்கள் காட்டிய மரியாதையும் அவர் மீது கூடுதலான மரியாதையை ஏற்படுத்தியது.

கிர்க்கெட்டில் எப்பொழுதுமே அரசியலுக்கான அழுத்தம் இருந்து கொண்டே தான் இருக்கும். கவுதம் காம்பீர் போன்ற பலரும் ஆளும் தரப்பிடம் சரண்டர் ஆகிவிட்டார்கள். கங்குலிக்குமே அந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதேபோல்தான் தோனிக்கும் தொடர்ச்சியாக பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு கொண்டே இருந்ததாக சொல்லப்பட்டது. குறிப்பாக ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தோனியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்திகள் கசிந்தது.

பல வீரர்கள் நேரடியாகவே மறைமுகமாகவோ ஆளும் தரப்புக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பார்கள். அது தேசப்பக்தி என்ற பெயரில் இருக்கும். ஆனால், இதுவரை தோனி அப்படியான எந்த அழுத்தத்திற்கு ஆளானதாக தெரியவில்லை. அவர் அயோத்தி கோயிலுக்கும் செல்லவில்லை. தேர்தல் வலையிலும் விழவில்லை.

ஆனால், மக்களின் கொண்டாட்டங்களில் பல நேரங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பயணங்கள் போகிறார், நண்பர்களுடன் இருக்கிறார், இயற்கை விவசாயம் செய்கிறார். இவையெல்லாம் மற்ற வீரர்களிடம் இருந்து தோனியை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது. மற்றவர்களின் சமூக வலைதள பக்கங்களுக்கும் அவருடைய சமூக வலைதள பக்கங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே புரியும்.

எப்பொழுது ஒரு நபர் மற்றவர்கள் பின்பற்றக்கூடியவராக மாறுகிறாரோ அப்பொழுதான் அவர் ஹீரோ ஆக மாறுகிறார். கிரிக்கெட் உலகையும் தாண்டியும் வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய பல்வேறு அம்சங்களை தோனி அடுத்த தலைமுறைக்கு கொடுத்துள்ளார். அதாவது ஒரு ரோல் மாடல் ஆக பலருக்கும் மாறியிருக்கிறார். தலைமைப்பண்பு, விடா முயற்சி, அழகுணர்ச்சி, எல்லா தரப்பினையும் கணக்கில் கொள்வது என பல விஷயங்கள் அவரிடம் இருந்து பின்பற்ற உள்ளது. ஏதோ ஒரு வகையில் தங்களிடம் இருந்து வந்த ஒருவனாக பார்த்து அவரிடம் கற்றுக் கொள்ள ஏதோ இருப்பதாக நினைப்பதால் தான் மக்களின் மனதில் தோனி இடம்பிடித்தார். வணிக தரப்பில் நடந்த பிஆர் வேலைகளை தாண்டியும் தோனிக்கு கிடைத்துள்ள இந்த பிம்பம் உண்மையானதுதான்.

தோனி மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதனை வியாபாரம் ஆக்கும் முயற்சியே கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களுக்கு சில வெறுப்புகளை உருவாக்கக் காரணமாக அமைந்தது. நிச்சயம் அது ஒரு நெருக்கடிதான். அதற்கும் இடம்கொடுக்காமல் தோனி இருந்திருக்க வேண்டும் என்பதே பலரது எண்ணம். எப்படி இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் தோனி.