பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலா ன முதல் டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி, அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 354 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வொயிட் 110 ரன்களும் ஹெட்மையர் 86 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் மெஹடி ஹசன் 5 விக்கெட்டுகளையும் அபு ஜெயத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பங்களதேஷ் அணி, வெஸ்ட் இண்டீஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் எளிதில் விக்கெட்டை இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்திய பிராத்வொயிட் 8 ரன்னில் அவுட்டானார். அவர் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஸ்மித் 8 ரன்களுடனும் கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்துள்ளது.