விளையாட்டு

டான்ஸ் ஆடி ரோகித்தை மிரள வைத்த பாப்பா..! - ஜாலி வீடியோ

டான்ஸ் ஆடி ரோகித்தை மிரள வைத்த பாப்பா..! - ஜாலி வீடியோ

webteam

ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் ஒரு சிறுமியின் நடனத்தை பின்பற்ற முடியாமல் ரோகித் ஷர்மா மிரண்டு போகும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருடன் களமிறங்கிய தவான் 0 (1) என ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் கோலி 3 (8), அம்பத்தி ராயுடு 0 (2) ரன்னில் வெளியேறிய இந்திய தடுமாறிப்போனது. 

பின்னர் வந்த தோனி ரோகித் ஷர்மாவுடன் சேர்ந்து பொறுப்பான, பொறுமையான பேட்டிங்கை செய்தார். அவரது பொறுமை ரசிகர்களை சற்று அமைதியாக்கி விட்டது. 51 (96) ரன்களில் தோனி விக்கெட்டை பறிகொடுக்க, தொடர்ந்து விளையாடி ரோகித் சதம் விளாசினார். அத்துடன் அதிரடியையும் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனாலும் அடுத்து வந்த தினேஷ் கார்த்தி, ஜடேஜா ஆகியோ சொதப்பியதால் இந்தியா தோல்வியடைந்தது. இருப்பினும் ரோகித்தின் சதம் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.

இந்தியாவின் தோல்வியின் வருத்தம் இருந்தபோதிலும், சதம் அடித்த மகிழ்ச்சியுடன் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் ரோகித் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிறுமி ஒருவர் ரோகித்திற்கு இடுப்பை ஆட்டி ஆடும் நடனத்தை சொல்லிக்கொடுத்தார். ஆரம்பத்தில் சிறுமி மெல்லமாக ஆட ரோகித்தும், அச்சிறுமியை பின்தொடர்ந்து ஆடினார். ஆனால் சிறிது நேரத்தில் சிறுமி ஊஞ்சல்போல வேகமாக ஆட, அதைப் பின்பற்ற முடியாமல் மிரண்டு போன ரோகித் ‘இங்க பாரு’ என தினேஷ் கார்த்தியிடம் கூறினார். பின்னர் தினேஷ் கார்த்திக்கும் முயன்று முடியவில்லை. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.