விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை பைனல் : இறுதி வரை வெற்றிக்காக போராடிய தமிழ்நாடு கிரிக்கெட் அணி

EllusamyKarthik

நடப்பு சீசனுக்கான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேச கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை செய்தன. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இமாச்சல பிரதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. 

அதனால் தமிழ்நாடு அணி முதல் பேட் செய்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்களை எடுத்திருந்தது. தமிழ்நாடு அணி சார்பில் தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித், ஷாருக் கான் மாதிரியான பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர். 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது இமாச்சல் அணி.  

அந்த அணிக்காக ஷூபம் அரோரா மற்றும் பிரஷாந்த் சோப்ரா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாச்சல் அணி 100 ரன்கள் சேர்ப்பதற்குள் சீரான இடைவெளியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர் தமிழ்நாடு அணி பவுலர்கள்.  இருப்பினும் நான்காவது விக்கெட்டிற்கு 148 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஷூபம் அரோரா மற்றும் அமித் குமார். இதில் அமித் 79 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து அவுட்டானார். பின்னர் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் ரிஷி தவான், அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 

இமாச்சல் அணி 47.3 ஓவர்களில் 299 ரன்களை குவித்த நிலையில் VJD முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த அணி நடப்பு சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெற்றிக்காக இறுதிவரை போராடி தோல்வியை தழுவியுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் அணி. 136 ரன்கள் மற்றும் 3 கேட்ச்களை பிடித்து அசத்திய ஷூபம் அரோரா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.