விளையாட்டு

'நீங்க தூங்கிட்டு இருக்கிற நேரத்துல நான் மெடல் வாங்கிட்டேன்' தந்தையிடம் ஹிமா தாஸ்

'நீங்க தூங்கிட்டு இருக்கிற நேரத்துல நான் மெடல் வாங்கிட்டேன்' தந்தையிடம் ஹிமா தாஸ்

webteam

தேசத்தின் பெருமையை சர்வதேச மேடையில் தாங்கிக் நிற்கும் போது, உணர்வின் பெரு மகிழ்ச்சி கலந்து வரும் ஆனந்தகண்ணீரை தடுக்க இயலாது. அப்படி ஒரு பெருமிதத்துடன் தேசத்தின் புதிய தடகள புயலாய் உருவெடுத்திருக்கிறார் அசாமைச் சேர்ந்த இளம் தடகள நாயகி ஹிமா தாஸ்.

"நீங்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த போது, நான் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருந்தேன்". உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் தங்கப்பதக்கத்தை தமதாக்கிய பின் தமது தந்தையிடம் தொலைபேசி வாயிலாக ஹிமா தாஸ் பேசிய வார்த்தைகள் இவை. ஃபின்லாந்தின் நடைபெற்ற இருபது வயதுக்குப்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவின் நம்பிக்கையை திறந்து வைத்திருக்கிறார் ஹிமா தாஸ். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் TRACK எனும் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை வசப்படுத்தினார்.

அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமத்தை சேர்ந்த நெல் விவசாயி ரஞ்சித் தாஸின் மகளான ஹிமா தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டில் தான் ஆர்வம் செலுத்தியிருக்கிறார். கால்பந்து போட்டிகளில் அவர் பந்தை கடத்திக் செல்லும் வேகத்தை கண்டறிந்த ஷம்ஷுல் ஷேக் என்ற ஆசிரியர், தாஸை ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வழிகாட்டுதல் வழங்கினார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான் தடகளப் போட்டிகளில் ஹிமா தாஸ் கலந்து கொள்ள தொடங்கினார்.

இதன்பின்னர் கவுகாத்தி சென்று தடகள பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். தொடக்கத்தில் திங் கிராமத்தில் இருந்து ஹிமா, கவுகாத்தி பயிற்சி முகாமுக்கு செல்ல முயன்ற போது தந்தை ரஞ்சித் தாஸ்க்கு பெரும் தயக்கம் இருந்தது. பொருளாதாரச் சிக்கல் ‌ஒருபுறம். பாதுகாப்பு குறித்த சிந்தனை மறுபுறம். ஆனால் ஹிமா தாஸின் நெஞ்சுரமும், நம்பிக்கை நிறைந்த வார்தைகளும் ரஞ்சித்தை ஆறுதல் படுத்தின. கவுகாத்தியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் பயிற்சிய முகாமுக்கு அனுப்பி வைத்தார். நிப்பன் தாஸ் என்ற பயிற்சியாளரால் ஹிமா தாஸின் திறமை மெரூகூட்டப்பட்டது. தொடக்கத்தில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்ட ஹிமா தாஸ் பின்னர் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆர்வம் செலுத்த தொடங்கினார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாதனை முயற்சியுடன் களமிறங்குபவர்கள் எதிர்கொள்ளும் சமூக‌, பொருளாதார, பிரச்னைகளை எதிர்கொண்ட ஹிமா தாஸின் குடும்பம் பல்வேறு வலிகளை கடந்து இன்று, தேசத்தின் ஒட்டுமொத்த பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

தேசத்தின் பெருமையை நிலைநாட்டிய ஹிமா தாஸ்க்கு, தங்கப்பதக்கம் கழுத்தில் அணிவிக்கப்பட்ட போது அவரது கண்ணீர் ததும்பியது. தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவரது முகம் ஆனந்த கண்ணீரில் நனைந்தது. வலி, வேதனை, கடும் பயிற்சி, பெரும் முயற்சி, பூரிப்பு என சகல உணர்வுகளும் அந்த கண்ணீருக்குள் அடங்கியிருந்தது.

தடகள விளையாட்டில் மட்டுமல்ல, சமுக பிரச்னைகளிலும் ஹிமா ஆர்வம் காட்டியிருக்கிறார். தமது பகுதியில் மது விற்பனையை தடுப்பதிலும் அவர் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். இந்திய தடகளத் துறையின் புதிய நம்பிக்கையாக பூத்திருக்கிறார் ஹிமா தாஸ்