உலக கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, போலந்து, பிரான்ஸ், அர்ஜெண்டினா அணிகள் வெற்றி பெற்றன.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஆஸ்திரேலிய அணி துனிசியாவை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அல்வக்ரா நகரில் நடைபெற்ற போட்டியில், தொடக்கம் முதலே இரு அணியினரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 23ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்ச்செல் டியூக் தலையால் முட்டி அபாரமான முறையில் கோலடித்தார். பதில் கோல் அடிக்க துனிசியா அணியினர் தீவிரமாகப் போராடினர். ஆனாலும் பலன் கிட்டவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி துனிசியாவை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
எஜூகேஷன் சிட்டி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், போலந்து சவுதி அரேபியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 39 ஆவது நிமிடத்தில் போலந்து வீரர் ஷியாலின்ஸ்கி கோல் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அதனை தொடர்ந்து, ராபேர்ட் லேவாண்டோஸ்கி 82ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து போலந்து அணிக்கு கூடுதல் பலன் சேர்த்தார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் போலந்து வெற்றி பெற்றது.
குரூப் டி-ல் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில் 61ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே முதல் கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டென்மார்க் அணி வீரர் கிரிஸ்டென்சென் பதில் கோல் அடித்தார். அதனைதொடர்ந்து, 86ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இறுதியில் டென்மார்க் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி கண்டது. இதன் மூலம், பிரான்ஸ் அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
லுசைல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா-மெக்சிகோ அணிகள் மோதின. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அர்ஜெண்டினா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியின் மெஸ்சி 64ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
அதனைதொடர்ந்து, 87ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி வீரர் பெர்னான்டெஸ் கோல் அடித்தார். இதன்மூலம் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வெற்றியை பதிவு செய்தது.