விளையாட்டு

"என் மகன் சதமடித்திருக்கலாம்!" - சுப்மன் கில் தந்தை கவலை

jagadeesh

தன் மகன் சதமடித்திருந்தால் அவனுக்கு அது மேலும் நம்பிக்கைக்கு உரியதாக இருந்திருக்கும் என்று இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் சுப்மன் கில் தந்தை லக்விந்தர் கில் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

காபாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 91 ரன்களை குவித்தார். சுப்மன் கில்லின் 91 ரன்கள் இந்திய அணி வெற்றிப்பெற பெரிதும் உதவியது. இந்தியா போட்டியை வென்றதுடன் மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ் விளையாடிய 21 வயதான சுப்மன் கில் 259 ரன்களை சேர்த்தார்.

இது குறித்து சுப்மன் கில் தந்தை லக்விந்தர் சிங் "டைமஸ் ஆஃப் இந்தியா"வுக்கு அளித்த பேட்டியில் "அவர் சதமடித்திருந்தால் அவருடைய தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும். அவர் நன்றாக விளையாடிக்கொண்டு இருந்தார். திடீரென ஏன் ஸ்டம்பில் இருந்து வெளியே செல்லும் பந்தை ஆட முற்பட்டார் என தெரியவில்லை. இந்தத் தொடரில் அவரின் 6 இன்னிங்ஸிலும் சப்மன் கில் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவுமே விளையாடினார்"

மேலும் பேசிய அவர் "ஆனால் எனக்கு அவர் இந்தத் தொடரில் ஆட்டமிழந்தவிதங்கள்தான் மிகவும் வருத்தத்தை தருகிறது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை அடிக்க முயன்ற பந்தை அடிக்க முயன்று அவுட்டாகியிருக்கிறார். இதனை மற்ற அணிகளும் கவனித்து இருக்கும். எனினும் இந்தத் தவறை சுப்மன் கில் திருத்திக்கொள்வார் என நம்புகிறேன்" என்றார் லக்விந்தர் கில்.