ஹசில்வுட், ஹசரங்கா, சிராஜின் அசத்தல் பந்துவீச்சால் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரன்களுக்குள் சுருட்டியது ஆர்சிபி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் ஓப்பனர்களாக களமிறங்கினர். சிராஜ் பந்துவீச்சில் படிக்கல் எல்பிடபுள்யூ ஆகி அவுட்டாகி வெளியேறினார். புதிய மாற்றமாக அடுத்து களமிறங்கிய அஸ்வின் 4 பவுண்டரிகளை விளாசிவிட்டு சிராஜ் பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லரும் ஹசில்வுட் பந்துவீச்சில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ராஜஸ்தானின் டாப் ஆர்டர் பவர்பிளேவுக்கு உள்ளேயே காலியானது. அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், டேரில் மிட்செல்லும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அதுவும் வெகு நேரம் நீடிக்கவில்லை. ஹசரங்கா பந்துவீச்சில் சாம்சன் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
ஹசில்வுட்டிடம் சிக்கி மிட்செல்லும் நடையைக் கட்ட, ராஜஸ்தான் அணி தள்ளாடத் துவங்கியது. அதிரடி வீரர் ஹெட்மேயரும் ஹசரங்காவிடம் விக்கெட்டை பறிகொடுக்க, தனியாளாக ரியான் பராக் தன் அணி பவுலர்களுடன் கூட்டணி அமைத்து போராடினார்.
பவுலர்களும் வரிசையாக அவுட்டான போதிலும், பொறுப்பாக விளையாடினார் ரியான். ஹர்சல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரியை அவர் விளாசி அரைசதத்தை தொட்டார். அணியும் 144 என்ற கொஞ்சம் கவுரமான ஸ்கோரை எட்டியது. ஹசில்வுட், சிராஜ், ஹசரங்கா ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தற்போது 145 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது ஆர்சிபி!