விளையாட்டு

ஷமியை கைது செய்ய உதவுங்கள்: மன்றாடும் ஹசின் ஜஹான்

ஷமியை கைது செய்ய உதவுங்கள்: மன்றாடும் ஹசின் ஜஹான்

webteam

கிரிக்கெட் வீரர் ஷமியை கைது செய்ய உதவுங்கள் என அவரது மனைவி ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஹசின் ஜஹான் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்  வாக்குமூலம் அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  “ஷமி மற்றும் அவரது சகோதரர் என்னிடம் தவறான நடந்துக்கொண்டனர். நான் என் குடும்பத்தை காப்பதற்காக அமைதியாக இருந்தேன். ஆனால் நான் தற்போது இதனை எதிர்த்து போராட வந்துள்ளேன். ஆனால் எல்லோரும் என் மீது குற்றச்சாட்டுகின்றனர். 

நான் ஒரு பெண்ணாக இருப்பதால், ஏன் இதை சகித்துக்கொள்ள வேண்டும். உங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் எனக்கு உதவியாக இருங்கள். இந்தப்போராட்டம் பெண்ணின் மரியாதைக்கும் கவுரவத்துக்குமான போராட்டம். ஷமி எனது கவுரவத்தை கெடுத்துவிட்டார். நான் ஷமி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளேன். எந்தப்பெண்ணும் இதுபோன்று செய்ய மாட்டாள். பிரபலங்கள் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? இதுப்போன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும். ஊடகங்கள் இவர்களுக்கு எதிராக பேச வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும்” என்றார்.

மேலும் பேசியவர்  “ஷமியை கைது செய்ய எனக்கு உதவுங்கள். என் வலியை புரிந்துக்கொள்ளுங்கள். ஷமியை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் நான் இன்று பிரபலமாகவும், செல்வந்தராகவும் இருந்திருப்பேன். நான் அதை விரும்பவில்லை. ஷமியை நான் திருமணம் செய்த போது அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அப்போது அவர் இந்திய அணியிலும் அப்போது இல்லை. தயவுசெய்து நீங்கள் சிந்திக்க வேண்டும்” எனக்கூறினார்.