மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கவுர், சாதனை சதம் அடித்தார். 90 பந்துகளில் சதம் விளாசிய அவர், 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார்.
போட்டிக்குப் பின் பேசிய அவர், ‘இந்த தொடரில் நேற்றுதான் எனக்கு சரியான வாய்ப்புக் கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதனால் அடித்து ஆடினேன். நான் நினைத்தது நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி’ என்றார்.
ஒரு கட்டத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்தீர்களே ஏன்? என்று கேட்டபோது, ‘இரண்டு ரன் ஓட முடிவெடுத்துவிட்டேன். ஆனால், தீப்தி அதை சரியாக கவனிக்காமல் கொஞ்சம் நின்றுதான் ஓடிவந்தார். இதை எதிர்பார்க்கவில்லை. நான் அவுட் ஆகிவிடுவேன் என்றே நினைத்தேன். எனது விக்கெட்டையும் அவரது விக்கெட்டையும் இழந்து விடக்கூடாது என்று நினைத்ததால் கோபத்தில் அப்படி நடந்துகொண்டேன். பிறகு தீப்தியிடம் இதற்கு வருத்தம் தெரிவித்தேன்’ என்றார்.