மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அபார சதமடித்து சாதனை படைத்தார்.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், ரன்மழை பொழிந்து 49 பந்தில் அபார சதமடித்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக் கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார். அத்துடன் டி20 உலக கோப்பையில் சதம் அடித்த 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார். அவர் 51 பந்தில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குத் துணையாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்கள் எடுத்தார்.
கடைசி 7 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 96 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது. மகளிர் டி20 உலக கோப்பையில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது.
அடுத்து 195 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியால், 20 ஓவர்களில் முடிவில் 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுஸி பேட்ஸ் மட்டும் நிலைத்து நின்று 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கேடி மார்டின் 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் ஹேமலதா, பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டும் ராதா யாதவ் 2 விக்கெட்டும் அருந்ததி ரெட்டி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது.