விளையாட்டு

அம்பேத்கர் பற்றி இழிவான கருத்து பதிவிட்டேனா...? பதறிப்போய் ஹர்திக் பாண்ட்யா விளக்கம்

அம்பேத்கர் பற்றி இழிவான கருத்து பதிவிட்டேனா...? பதறிப்போய் ஹர்திக் பாண்ட்யா விளக்கம்

rajakannan

அம்பேத்கர் குறித்து இழிவான கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டதாக எழுந்த புகார் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். 

ஹர்திக் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் பற்றி இழிவான கருத்தை தெரிவித்ததாக கூறப்படும் செய்தி சமூக வலைதளங்களில் பரலாக பேசப்பட்டது. @sirhardik3777 என்ற ட்விட்டர் கணக்கில் கடந்த டிசம்பர் மாதம் போடப்பட்ட கருத்துக்குதான் இப்போது பஞ்சாயத்து எழுந்துள்ளது. 

“எந்த அம்பேத்கரை கேட்கிறீர்கள், அரசியலமைப்பு சட்டம் இயற்றியவரையா? அல்லது இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பிய அம்பேத்கரையா” இதுதான் பாண்ட்யா போட்ட கருத்து. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்று, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்ற உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் பாண்ட்யா கைது செய்யப்படும் வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு தற்போது ஒரு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது அதிரடியான ஆட்டம் பலரையும் கவர்ந்துவிட்டது. ஒரு குறிப்பிடும்படியான வீரர் என்பதால் இது சீக்கிரம் விவாதத்திற்கு வந்துவிட்டது. 

நீதிமன்ற உத்தரவை அடுத்து ஹர்திக் பாண்ட்யா தனது தரப்பில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அம்பேத்கர் குறித்து தான் எந்தவொரு கருத்தும் பதிவிடவில்லை என்று கூறியுள்ளார். 

பாண்ட்யா தனது அறிக்கையில், “அம்பேத்கர் பற்றி நான் இழிவான கருத்துக்களை பதிவிட்டுள்ளேன் என்று சமூக வலைதளங்களில் இன்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. என்னுடைய ட்விட்டரில் அப்படியொரு கருத்தை நான் பதிவு செய்யவில்லை என்று இந்தத் தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கி வேறு யாரோ இந்தக் கருத்தை பதிவிட்டுள்ளார்கள். நான் என்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தை (@hardikpandya7) மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

அம்பேத்கர் மீதும், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு சமுதாயத்தினர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியா என்னுடைய தாய் நாடு என்று சொல்லும் போது, மற்ற சமுதாயங்களை சேர்ந்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். என்னுடைய ரசிகர்களுடன் இணைந்திருப்பதற்காகவே நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறேன். தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களில் நடக்கும் இதுபோன்ற தவறுகளை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. 

இதுதொடர்பான நான் தேவையான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிப்பேன். என்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் யாரோ இந்தச் செயலை செய்துள்ளார்கள் என்பதையும் தெரிவிப்பேன். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் நாட்டில் நிறைய பிரபலங்களுக்கும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்தவுடன் அவர் தரப்பில் இந்தப் பிரச்னை முடிந்துவிடும்தான். புகார் அளிக்கப்பட்ட ட்விட்டர் பக்கம் அதிகாரப்பூர்வமானது அல்ல. அதற்கான டிக் மார்க் இல்லை. இதற்கான ஆதரங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்பித்துவிடுவார். ஆனால் இங்கு சிக்கலுக்குரிய விஷயம் என்னவென்றால், யாரோ போடும் பதிவிற்காக இன்று இடஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தை போரையே நடத்தி இருப்பார்கள் வலைத்தள வாசிகள். இதுபோன்ற விவாதங்களுக்கு இடமளிப்பது என்பதே ஒருவகையில் சிக்கல்தான். அதனால் நிச்சயம் போலியான ட்விட்டர் கணக்குகளை கண்டறிய வழிமுறைகள் நிச்சயம் தேவைதான்.