சிக்ஸர்களாக விளாசி ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா களங்கடித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றதால் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். முதலில் விளையாடி இந்திய அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது. கோலி, மணிஷ் பாண்டே டக் அவுட் ஆனார்கள். இந்த இக்கட்டான நிலையில் நிலையில் இருந்து ரோகித் சர்மாவும், கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து சற்று மீட்டனர்.
இருப்பினும், 87 ரன்களை எட்டுவதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், கேதர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து முன்னாள் கேப்டன் தோனி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். தோனி நிதானமாக விளையாட, பாண்ட்யா சீராக ரன்களை சேர்த்தார். இருவரும் இணைந்து சுமார் 10 ஓவர்களுக்கு மேல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
பின்னர் தனது பொறுமையை கைவிட்ட ஹர்திக் பாண்ட்யா, ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா வீசிய 37-வது ஓவரை பதம் பார்த்தார். அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார். அதுவும் ஹாட்ரிக் சிக்ஸர். தொடர்ந்து அதிரடியாக சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பாண்ட்யா விளாசினார். இதனால் இந்திய அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. ஆஸ்திரேலிய வீரர்களால் பாண்ட்யாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது அதிரடிக்கு பின் 5 ஓவர்களில் 50 ரன்கள் எடுக்கப்பட்டது.
அதிரடியாக ஆட்டத்தின் போக்கையை மாற்றிய பாண்ட்யா 65 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தபோது ஜம்பா ஓவரிலேயே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மொத்தம் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டர்கள் அடித்தார். பாண்ட்யாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி எளிதில் 200 ரன்களை எட்டியது. பாண்ட்யா ஆட்டமிழந்தபோது இந்திய அணி 40.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்திருந்தது.