விளையாட்டு

‘தமிழில்தான் ஹீரோ ஆவேன்’ - நிறைவேறிய ஹர்பஜன் சிங் ஆசை

‘தமிழில்தான் ஹீரோ ஆவேன்’ - நிறைவேறிய ஹர்பஜன் சிங் ஆசை

webteam

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் தொடர்ந்து வெளியிடும் தமிழ் ட்விட்டர் பதிவுகள் மூலம் அதிகம் பிரபலமானார். சென்னைத் தமிழ், செந்தமிழ் என ஹர்பஜன் சிங் மாற்றி மாற்றி பதிவிடும் ட்வீட்களால் ‘தமிழ்ப் புலவர்’ என அவரைத் தமிழ் ரசிகர்கள் செல்லமாக குறிப்பிடத் தொடங்கினர்.

இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து வருகிறார். வெப் சீரிஸ் ஒன்றில் நவீன திருவள்ளுவர் ஆகவும் நடித்து வரும் ஹர்பஜன் சிங், அதனை அடுத்து தமிழ் சினிமாவில்  ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

“இந்தக் கதை ஒரு மலையாள திரைப்படத்தின் பாதிப்பில் இருந்து உருவானது. ஹர்பஜனை பார்த்து நான் மும்பையில் கதை சொன்னேன். அவருக்கு பஞ்சாபி மற்றும் இந்தியில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவர் தமிழில் நாயகனாக நடிக்கவே விரும்பினார். இந்தப் படம் கிரிக்கெட், மாணவர்களுக்கான அரசியல் மற்றும் பெண்களின் முன்னேற்றம் தொடர்பானதாக இருக்கும்” என்று படத்தின் இயக்குநர் ஜான், டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.