இந்திய அணி குறித்து ஹர்பஜன் சிங் பதிவிட்ட கருத்தினை ட்விட்டரில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் ரீ ட்விட் செய்தனர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளதாக கேள்வி எழுப்பி இருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “சமீப காலமாக, இந்திய அணியில் யாராவது ஒரு இஸ்லாமியர் இடம்பெற்றுள்ளாரா? நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இதேபோன்று எத்தனை முறை நடைபெற்றுள்ளது. இஸ்லாமியர்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்டார்களா? அல்லது தேர்வாளர்கள் வேறு ஏதாவது ஒரு விளையாட்டின் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா?” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்தப் பதிவிற்கு பலரும் பதில் அளித்திருந்தனர். அதேபோல், இதற்கு இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் உடனடியாக பதில் அளித்திருந்தார். அதில், “அணியில் இடம்பெறுகின்ற அனைவரும் இந்தியர்கள்தான். அவர்களுடைய ஜாதி அல்லது நிறம் குறித்து விவாதிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். ஹர்பஜன் சிங்கின் இந்த ட்விட்டரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரீ ட்விட் செய்துள்ளார்கள்.