விளையாட்டு

ஆஸி. வீரரின் கீழ்த்தரமான செயல்: ஐசிசியை விளாசிய ஹர்பஜன்சிங்

ஆஸி. வீரரின் கீழ்த்தரமான செயல்: ஐசிசியை விளாசிய ஹர்பஜன்சிங்

webteam

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐசிசியை ட்விட்டரில் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் கேமருன் பேன்கிராஃப்ட், மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராப்ஃட் தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார்.
 
இவ்விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். சிலர் கேப்டன் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்புல் பந்தை சேதப்படுத்திய விவகாரம், ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். புதிய பொறுப்பு கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும் ஐசிசி விதித்துள்ளது. இதேபோல் பேன்கிராப்ஃட்க்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்துள்ளது. 

இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர் “ ஐசிசியின் சிகிச்சை சிறப்பாக உள்ளது. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? பேன்கிராஃப்ட்க்கு தடை விதிக்காதது ஏன்? கடந்த 2001 ஆம் ஆண்டு இதுபோன்ற விவகாரத்தில் இந்திய வீரர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2008 சிட்னி விவகாரத்திலும் 3போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது” எனப் பொங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கங்குலி தலைமையில் கடந்த 2001ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. போர்ட் எலிசபெத்தில் நடைப்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் 6பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், ஷேவாக்குக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் விதிக்கப்பட்டது. அணியை வழிநடத்திச் சென்ற கங்குலிக்கு ஒரு டெஸ்ட் போட்டி, இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், துவக்க ஆட்டக்காரர் ஷிவ் சுந்தர் தாஸ், விக்கெட் கீப்பர் தீப்தாஸ் குப்தாவுக்கு ஆகியோரும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

அதேபோன்று 2008ஆம் ஆண்டு சிட்னியில் நடைப்பெற்ற போட்டியில் ஹர்பஜனுக்கும் - ஆஸி வீரர் சைமண்ட்ஸ்க்கும் ஏற்பட்ட தகராறில் ஹர்பஜனுக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஹர்பஜன்சிங் தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை ட்விட்டரில் வறுத்தெடுத்துள்ளார்.