விளையாட்டு

''ஐபிஎல்லின் நட்புக்கில்லை முற்றுப்புள்ளி; செம பீலிங் வித் மச்சான் தோனி'' - ட்விட்டரில் உருகிய ஹர்பஜன்

webteam

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவரை கடந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதனையடுத்து அவர் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழில் ட்விட் போட்டார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பின்பு உலக மகளிர் தினத்தன்று ஹர்பஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்தை கவிதையாக தமிழில் பதிவிட்டு அனைவரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால் பஞ்சாப்பில் பிறந்த ஹர்பஜன் சிங் பச்சைத் தமிழனாக மாறிவிட்டதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் கொண்டாடினர். 'புலவர் ஹர்பஜன்’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். இதனையடுத்து தமிழகம் சார்ந்த பல விஷயங்களிலும் ஹர்பஜன் தமிழிலேயே ட்வீட் செய்தார். இது சிஎஸ்கே ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்த ஹர்பஜன், ஐபிஎல்-இல் பங்கேற்க மீண்டும் தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன் என தனது தமிழ் ட்வீட் ஆட்டத்தை தொடங்கினார். பின்னர் ஷூட்டிங் குறித்து ட்வீட் செய்த அவர் ''தல பாட்டு போட நான்டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க'' என்று ட்வீட் செய்தார். இந்நிலையில் தனக்கும் தோனிக்கும் உள்ள நட்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில் ''நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணை தொடலாம் உந்தன் சிறகு, வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே, இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம். சென்னை ஐபிஎல்லின் நட்பிக்கில்லை முற்றுப்புள்ளியே செம பீலிங் வித் மச்சான், தோனி மாப்ள!'' என்று பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய முதல் ரசிகர் என்று ஹர்பஜன் கூறிய, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் என்பவரே ஹர்பஜனுக்காக தமிழில் ட்வீட் செய்ய உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.