வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் அதிகப்பட்ச ஸ்கோர் இது.
இதில் அறிமுக வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா 134 ரன்களும், கேப்டன் விராத் கோலி 139 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 100 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டுகளும் லெவிஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ’ வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான மரியாதையோடு உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். இந்த அணியை வைத்துக் கொண்டு ரஞ்சி காலிறுதிக்குத் தகுதி பெற முடியுமா?” என்று ட்வீட் செய்து கிண்டல் செய்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்வினைகளை தெரிவித்துள்ளனர்.
'2011, 2014 ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடர்களில் இந்திய அணி சந்தித்த தோல்விக்கு அந்நாட்டு வீரர்கள் இப்படி கிண்டல் செய்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்’ என்று அபினவ் மிஸ்ரா என்ற ரசிகர் கேட்டுள்ளார்.
’இதுபோன்ற நடத்தை காரணமாகத்தான் நீங்கள் அணியில் இடம் கிடைக்காமல் ட்வீட் செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்வது அவமரியாதையாக இருக்கிறது’ என்று கிரண் என்பவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், ‘தனது ஆட்டத்திறனை பற்றிதான் ஒருவர் கவலைப்பட வேண்டுமே தவிர மற்றவர்களை பற்றி அல்ல’ என்று கூறியுள்ளார்.
‘ஒரு கிரிக்கெட்டராக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா? இதுபோன்ற கேவலமாக ட்வீட் செய்யாதீர்கள். இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிதான் இங்கிலாந்தில் வெற்றி பெற்றிருக்கிறது. சொந்த நாட்டில் சிறப்பாக விளையாடி இருக்கிறது’ என்று ஜான் என்பவர் தெரிவித்துள்ளார்.