இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோதின. இதில் இங்கிலாந்து லயன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஏ, இந்திய ஏ அணிகள் மோதின. இதில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் நேற்றுமுன்தினம் மோதின. இதிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரின் ஆறாவது போட்டி நார்த்தாம்டன் நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய ஏ அணியும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியும் மோதின.
டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த மயங்க் அகர்வாலுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதனால் பிருத்வி ஷாவுடன் ரிஷப் பண்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப், இந்தப் போட்டியில் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், டக்அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இரண்டு பேரின் விக்கெட்டையும் செமர் ஹோல்டர் வீழ்த்தினார். அடுத்து வந்த காக்கிநாடாவைச் சேர்ந்த ஹனுமா விஹாரியும் பிருத்வி ஷாவும் அதிரடியில் இறங்கினர். இருவரும் அபார சதம் அடித்தனர். பிருத்வி ஷா 90 பந்தில் 102 ரன்களும் விஹாரி 131 பந்தில் 147 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் வந்த தீபக் ஹூடா 21 ரன்களும் விஜய் சங்கர் 28 ரன்களும் இஷான் கிஷான் 21 ரன்களும் எடுக்க இந்திய ஏ அணி, 50 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் ஏ தரப்பில் செமர் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 355 ரன்கள் இலக்கை வெற்றியாகக் கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 37.4 ஓவர்களிலேயே 151 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய ஏ அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய ஏ அணி தரப்பில் அக்ஷர் படேல் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த வெற்றியை அடுத்து இறுதிப் போட்டிக்கு இந்திய ஏ அணி முன்னேறியுள்ளது.