விளையாட்டு

311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி - இலக்கை எட்டுமா தென்னாப்ரிக்கா?

311 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி - இலக்கை எட்டுமா தென்னாப்ரிக்கா?

rajakannan

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜானி பேரிஸ்டோவ், ஜேசன் ராய் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தென்னாப்ரிக்கா சார்பில் முதல் ஓவரை வீசிய இம்ரான் தாஹிர், பேரிஸ்டோவ் விக்கெட்டை சாய்த்தார். 

பின்னர், ராய் உடன் ரூட் ஜோடி சேர்த்தார். விக்கெட் வீழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் இருவரும் அடித்து விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால், 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் எடுத்தது. 

சிறப்பாக விளையாடி வந்த ராய் 54, ரூட் 51 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், இயான் மோர்கனுடன் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. மோர்கன் 60 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த பட்லர் 18 ரன்னில் ஏமாற்றினார். விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். அவர் 79 பந்தில் 89 ரன்கள் சேர்த்து இறுதியில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்ரிக்கா தரப்பில் நெகிடி 3 விக்கெட் சாய்த்தார். ரபாடா, தாஹிர் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.