சர்வதேச தடகள அரங்கில் 200 மீட்டர் ஓட்டத்தை 20 நொடிகளுக்குள் ஓடி முடிப்பது சவாலான இலக்காக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் 19.98 நொடியில் அந்த தொலைவை கடந்தும், அது சாதனை பட்டியலில் இடம் பிடிக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
கவுட் கவுட் (GOUT GOUT) என்ற அந்த இளைஞர் குவீன்ஸ்லாந்து மாகாண சாம்பியன்ஷிப் தொடரில் 200 மீட்டரை 19.98 நொடியில் கடந்தார். ஆனால், காற்றின் வேகம் காரணமாக அவர் ஆதாயம் அடைந்ததாகவும், எனவே அதை சாதனையாக கருத முடியாது என்றும் போட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனினும், இதே பந்தயத்தில் கவுட் கவுட் மற்றொரு சுற்றில் 200 மீட்டரை 20.05 நொடியில் கடந்த நிலையில், அதுவே இந்தாண்டின் சாதனை நேரமாக அமைந்தது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான சூடானில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த தம்பதியின் மகன்தான் கவுட் கவுட் என்பதும், தடகள உலகின் சிறந்த நட்சத்திரமாக அவர் உருவெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 200 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா ஜெட் என அழைக்கப்படும உசேன் போல்ட் 19.19 நொடியில் கடந்ததே தற்போது உலக சாதனையாக இருந்து வருகிறது.