விளையாட்டு

நாங்க ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு: இலங்கை கிரிக்கெட் கேப்டன் !

நாங்க ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு: இலங்கை கிரிக்கெட் கேப்டன் !

webteam

’கடந்த 12 போட்டிகளுக்குப் பிறகு தர்மசாலாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்’ என்று இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை, இந்தியாவை வீழ்த்தியது. 2-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் தோற்றால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இழக்க நேரிடும். அதனால் இரு அணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் ஆடும். 

இந்நிலையில் இலங்கை கேப்டன் திசாரா பெரேரா கூறும்போது, ‘ஒரு நாள் போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்று நாட்களாகிவிட்டது. கடந்த 12 போட்டிகளுக்குப் பிறகு கடந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இது எங்கள் அணியினருக்கு புத்துணர்ச்சியை தந்துள்ளது. அதே ஈடுபாட்டோடு இந்தப் போட்டியிலும் விளையாடுவோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். சரியான இடத்தில் வீசி விக்கெட் எடுக்கிறார்கள். கடந்த போட்டியின் வெற்றிக்கு அவர்கள்தான் காரணம். மொகாலி ஆடுகளம் பற்றி எனக்குத் தெரியும். ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியிருக்கிறேன். இது பேட்டிங் விக்கெட் போன்றுதான் தெரிகிறது. இந்தப் போட்டியில் வென்றால் நாங்கள் தொடரை வென்றுவிடுவோம். இது எங்கள் வீரர்களுக்கும் தெரியும். அதனால் சிறப்பாக விளையாடுவோம்’ என்றார்.