விளையாட்டு

`சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை; ஆனால் ரிஷப் பண்ட்...’- எம்.பி சசி தரூர் ட்வீட்!

JustinDurai

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது போட்டியில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் ஆட்டம் மந்தமாக இருந்துவரும் நிலையில் அவரை உட்கார வைத்துவிட்டு சாம்சனை இறக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 3வது போட்டியிலும் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை. இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ''ரிஷப் பண்ட் 4வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை ஆதரிப்பது அவசியம் என வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகிறார். பண்ட் ஒரு திறமையான வீரர்தான். ஆனால் பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர். அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10ல் சரியாக ஆட வில்லை. ஆனால் சாம்சனின் ஒருநாள் போட்டிகளில் சராசரி ரன் ரேட் 66 என்றுள்ளது. அவர் தனது கடைசி 5 போட்டிகளிலும் ரன்களை அடித்துள்ளார். ஆனாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.