ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 69 ரன்னில் சுருட்டியது இந்திய அணி.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி போட்டியில் நுழைந்த இந்திய அணி, இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கேப்டன் பிருத்வி ஷாவும் மன்ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி, முறையே 41, 47 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ’ஜூனியர் விராத் கோலி’ என்று சொல்லப்படும் சுப்மன் கில், அபார சதமடித்தார். 94 பந்துகளில் 102 ரன் குவித்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் முஹமது மூசா 4 விக்கெட்டுகளையும், அர்ஷாத் இக்பால் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ரோஹைல் நசிர் 18 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 29.3 ஓவர்களில் 69 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் பெங்காலைச் சேர்ந்த இஷான் பொரேல், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிவா சிங், பரங் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியை அடுத்து இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.