விளையாட்டு

ஒரு போட்டியை வைத்து கோலியை மதிப்பிட வேண்டாம்: கில்கிறிஸ்ட்

ஒரு போட்டியை வைத்து கோலியை மதிப்பிட வேண்டாம்: கில்கிறிஸ்ட்

webteam

ஒரே ஒரு போட்டியில் தோல்வியடைந்ததை வைத்துக் கொண்டு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை யாரும் மதிப்பிட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். 
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய கல்வி தூதராக நியமிக்கப்பட்டுள்ள கில்கிறிஸ்ட் டெல்லியில் நடைபெறும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் ஒரு வீரராக விராத் கோலியின் செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மோசமாக ஆடியதைக் கொண்டு அவரை மதிப்பிடுவது சரியாக இருக்காது என்று தெரிவித்தார். தோனி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தோனி மிகச்சிறந்த தலைவர். மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவர். ஆனால் கேப்டனாக விராத் கோலியின் செயல்பாடுகள் சமீபகாலங்களில் சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறது என்று கூறினார். சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக கோப்பையை வென்றது. தோல்வியை அடுத்து இந்திய அணி மற்றும் கேப்டன் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும்நிலையில், கில்கிறிஸ்ட் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.