விளையாட்டு

`ரோகித் சர்மா ஏன் அப்படி செய்யணும்? முன்பே இறங்கியிருக்கலாமே...’- சுனில் கவாஸ்கர் கருத்து

`ரோகித் சர்மா ஏன் அப்படி செய்யணும்? முன்பே இறங்கியிருக்கலாமே...’- சுனில் கவாஸ்கர் கருத்து

நிவேதா ஜெகராஜா

நேற்று நடந்த இந்தியா – வங்கதேசத்துக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது. இருப்பினும் அணியின் கேப்டன் தனது விரலில் காயத்துடன் போட்டியின் இறுதிவரை கடுமையாக பேட்டிங் செய்து அணிக்காக போராடி, தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவுக்கு ரோகித் சர்மாவின் நேற்றைய ஆட்டம் அமைந்திருந்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்து வருகின்றார்.

நேற்றைய ஆட்டத்தின்போது ரோகித் சர்மாவின் இடது கை கட்டவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்திருக்கிறது. அத்துடன் விளையாடித்தான் ரோகித் ஷர்மா 51 ரன்கள் அடித்திருந்தார். 44 பந்துகளில் 64 ரன்கள் வேண்டும் என்ற இலக்குடன், அணியின் 9-வது வீரராக களமிறங்கினார் ரோகித் சர்மா. களமிறங்கி 27 பந்துகளிலேயே 50 ரன்கள் அடித்திருந்தார் அவர்! இவ்வளவு போராடி விளையாடிதால், போட்டியில் தோற்றாலும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார் ரோகித்.

இருந்தபோதிலும்கூட தற்போது அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளார். கவாஸ்கர், “ஒருவேளை காயத்துடன் இன்றைய போட்டியில் பேட் செய்வது என்று ரோகித் ஏற்கெனவே தீர்மாணித்திருந்தால், அவர் கொஞ்சம் முன்னேயே களமிறங்கியிருக்க வேண்டும். 9-வது ஆட்டக்காரராக களமிறங்காமல், 7-வது ஆட்டக்காரராக களமிறங்கியிருக்கலாம்” என தெரிவித்திருக்கிறார். ரோகித் சர்மா இப்படி செய்திருந்தால், இந்தியாவிற்கு வெற்றி இலக்கை எட்டுவது எளிமையாக இருந்திருக்கும் என்று தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார் கவாஸ்கர்.

இதுபற்றி சோனி ஸ்போர்ட்ஸில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், “ரோகித்தின் திறமை மற்றும் அவர் ஆட்டத்தின் தரம் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். இப்போது விஷயம் என்னவென்றால், இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு மிக அருகில் வந்துவிட்டது. ஆனால் ஜெயிக்கவில்லை. அதனால்தான் ரோகித் ஏன் முன்பே களத்துக்குள் வரவில்லையென கேட்கிறேன். கையில் காயம் இருந்தது என்றபோதிலும்கூட, `இன்று நாம் பேட் செய்யப்போகிறோம்’ என்று அவர் முடிவுசெய்துவிட்டாரென்றால், அவர் ஏன் 9-வது நபராக உள்ளே இறங்க வேண்டும்? 7-வது நபராகவே இறங்கியிருக்கலாமே?

நான் என்ன நினைக்கிறேன் என்றால், அக்சர் படேல் வித்தியாசமாக விளையாடி இருக்கலாம். ஒருவேளை அக்சர், ரோகித் சர்மா பேட்டிங்கில் அசத்தமாட்டார் என்று நினைத்து அவர் பேட் செய்திருக்க கூடும். அந்த தருணத்தில், அவர் அந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்ற நிலையும் இல்லை. அக்சர் மிகச்சிறப்பாகவே பேட்டிங் செய்தார், பந்துகளை அழகாக கையாண்டார், ஆனால் அதை தொடர்ந்து அவர் செய்திருந்தால் ஆட்டம் வேறொரு படிநிலைக்கு சென்றிருக்கும். ரோகித் சர்மாவை பொறுத்தவரை 9-வது ஆட்டக்காரராக இருந்துக்கொண்டு, இந்தியாவை கிட்டத்தட்ட ஒரு வரலாற்று வெற்றிக்கு அவர் கொண்டு சென்றார். ஆனால் ஒருவேளை 7- வதாக களமிறங்கியிருந்தால், இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இன்னும்கூட பிரகாசமாக இருந்திருக்கும்” என்றுள்ளார்.