தன்னை மோசமான அணுகுமுறை கொண்டவர் என்று விமர்சித்த பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார் கவுதம் காம்பீர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிதி. இவர் பத்திரிகையாளர் வஜஹத் கானுடன் இணைந்து, ’கேம் சேஞ்சர்’ (Game Changer) என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இதில் பாகிஸ்தான் அணிக்காக, சுமார் 20 ஆண்டுகள் விளையாடிய அனுபவம், கிரிக்கெட் வாரிய பிரச்னைகள், முன்னாள் கேப்டன்கள், அணிக்குள் இருந்த சர்ச்சைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆடுகளத்தில் இருவரும் அடிக்கடி மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்த நிலையில், காம்பீர் பற்றி குறிப்பிட்டுள்ள அப்ரிதி, ‘’காம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை. அவர் கிரிக்கெட்டில் சாதாரண வீரர். மோசமான நடத்தையை தவிர வேறு எந்த சாதனையும் அவருக்கு இல்லை. அதிக திமிருடன் நடந்துகொள்வார். பிராட்மேன், ஜேம்ஸ்பாண்ட் கலவை என்ற நினைப்பில் நடந்து கொள்வார். 2007 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கவுதம் காம்பீர், ‘’அப்ரிதி நீங்கள் வேடிக்கையான மனிதர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச் சைக்காக, இந்தியா விசா வழங்கி வருகிறது. நீங்கள் இந்தியா வாருங்கள். தனிப்பட்ட முறையில் உங்களை மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.