மெதுவாக ஆடுவதன் மூலம் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு, தோனி நெருக்கடியை கொடுக்கிறார் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், தோனி 2 வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் அவரது ஆட்டம் பற்றி, இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கும் கவுதம் காம்பீர் கூறும்போது, ’தோனி, களத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அதிகமான டாட் பந்துகளை சந்திக்கிறார். சில பந்துகளை அடிப்பதில் தடுமாற்றம் தெரிகிறது. தோனி இப்படி ஆடுவது, பின்னால் வருகிற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தையே கொடுக்கும்.
அவர் பந்துகளை வீணடிக்காமல், வேகமாக ஆட வேண்டும். தோனியின் மெதுவான ஆட்டத்தால் இங்கிலாந்தின் ரஷித், மொயின் அலி ஆகிய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை சாய்த்துவிட்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தோனி, இப்படி பந்துகளை வீணடிக்க மாட்டார். இப்போதும் அப்படி ஆக்ரோஷமான ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் கடந்த ஒருவருடமாக தோனி போதுமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை என்று குறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.