விஜய் ஹசாரே கோப்பைக்கான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணியை மனோஜ் திவாரி தலைமையிலான மேற்குவங்க அணி எதிர்கொள்கிறது.
டெல்லி பாலம் மைதானத்தில் நாளை இந்த போட்டி நடக்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள மேற்குவங்க அணி வீரர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அம்மாநில கிரிக்கெட் சங்கத் தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனைகள் வழங்கியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், முழுமையாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தோனி கவனம் செலுத்திவருகிறார். நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு தலைமையேற்றுள்ள தோனி, லீக் போட்டிகளில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சட்டீஸ்கர் அணிக்கெதிரான போட்டியில் விஸ்வரூபமெடுத்த தோனி, 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 129 ரன்கள் குவித்தார்.