விளையாட்டு

10 ஆயிரம் ரசிகர்கள் முன்பு, சிஎஸ்கே பயிற்சி!

10 ஆயிரம் ரசிகர்கள் முன்பு, சிஎஸ்கே பயிற்சி!

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சிப் பெறுவதைப் பார்க்க, சுமார் பத்தாயிரம் ரசிகர்கள் திரண்டதால், கிரிக்கெட் வீரர்கள் ஆச்சரியமடைந்தனர்.

பதினோறாவது ஐபிஎல் கிரிகெட் திருவிழா அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. இதனால் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியிள் ஈடுபட்டுள்ளனர். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றும் பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் தோனி, முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் சிங், வாட்சன், இம்ரான் தாஹிர் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியாளர் பிளம்மிங்கும் இதில் கலந்துகொண்டார்.

இந்த தகவல் கேள்விபட்டதும் ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்குள் குவிந்தனர். அவர்களை தமிழ்நாடு கிரிகெட் சங்க நிர்வாகிகள் உள்ளே அனுப்பி வைத்தனர். சுமார் பத்தாயிரம் ரசிகர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்த ரசிகர்கள், பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதை பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் ரசித்தனர். பிராவோ, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மைதானத்தில் நடனமாடினார். 

‘பயிற்சியை பார்க்கவே இவ்வளவு ரசிகர்கள் வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏராளமான ரசிகர்கள் வந்து உற்சாகப்படுத்துவது ஆரோக்கியமாக இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை இது காட்டுகிறது. அதற்கேற்ப அணி கண்டிப்பாக சிறப்பாக செயல்படும்’ என்று சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

ஏப்ரல் 7ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.