குரேஷியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் இன்று அரங்கேறின. இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் குரேஷியா - பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.
போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், குரேஷியா அணி ஒரு கோலும் அடித்தன. இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. 59, 65 வது நிமிடங்களில் அந்த அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இதனால், 4-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது. அதனையடுத்து, குரேஷியா அணி 69வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதனால், குரேஷியா மேலும் கோல்கள் அடிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் நீண்ட நேரம் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை.
இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது. 1998-ல் சாம்பியன் பட்டம் வென்ற லீ ப்ளூஸ் என அழைக்கப்படும் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது.
இரண்டு முறை கோப்பையை வென்ற பட்டியலில் இருக்கும் அர்ஜென்டினா, உருகுவே ஆகிய அணிகளின் பட்டியலில் பிரான்ஸ் அணி இணைந்தது.