இந்திய கிரிக்கெட் அணியின் பவுலரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜன், “முன்னாள் இந்திய கேப்டன் தோனி தனக்கு சொன்ன அறிவுரைகள் கைமேல் பலன் கொடுக்கின்றன” என சொல்லியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் அண்மைய காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தனக்கு அந்த அறிவுரைகள் தான் காரணம் என உறுதி செய்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக யார்க்கர்கள் வீசி, சர்வதேச களத்தில் ஒரு ரவுண்டு வந்த தோனி, டிவில்லியர்ஸ் மாதிரியான பேட்ஸ்மேன்களை திக்கு முக்காட செய்திருந்தார். இந்நிலையில் கடந்த சீசனில் தான் தனக்கு தோனி அட்வைஸ் கொடுத்ததாக மனம் திறந்துள்ளார் நடராஜன். சனரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு பிறகு இந்த அறிவுரையை தோனி கூறியுள்ளார்.
“ஆட்டத்திற்கு பிறகு தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மாதிரியான ஆளுமைகளுடன் பேசுவதே பெரிய விஷயம். அவர் என்னுடன் பிட்னெஸ் குறித்து பேசியிருந்தார். எனக்கு ஊக்கம் கொடுத்தார். விளையாடுவதன் மூலம் கிடைக்கின்ற அனுபவங்கள் தான் நம்மை மேம்படுத்தும் என்றார். பந்து வீச்சில் ஸ்லோ பவுன்சர், கட்டர் போன்ற வேரியேஷன்களை கடைபிடிக்க சொன்னார். அது எனக்கு உதவி வருகிறது” என நடராஜன் தெரிவித்துள்ளார்.
தோனி விக்கெட்டை வீழ்த்திய தருணம் குறித்து பேசிய நடராஜன், “அந்தப் போட்டியில் நான் போட்ட பந்தில் 102 மீட்டர் அளவிற்கு இமாலய சிக்ஸரை விளாசினார் தோனி. அடுத்த பந்திலே அவரது விக்கெட்டை நான் வீழ்த்தினேன். அப்போது நான் அதனை கொண்டாடவில்லை. அதற்கு முந்தையை பந்து வீசாப்பட்ட முறையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஓய்வு அறைக்கு வந்த பிறகு அங்கு மகிழ்ச்சியாக இருந்தேன்” என்றார்.
அதே போல ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதையும் தன்னால் மறக்க முடியாத தருணம் என அவர் சொல்லியுள்ளார். அதுகுறித்து பேசிய அவர், “ஒரு புறம் எனக்கு மகள் பிறந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சி. மற்றொரு புறம் முக்கியமான நாக் அவுட் போட்டியில் விக்கெட் வீழ்த்தினேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால், எனக்கு குழந்தை பிறந்ததை மற்றவர்களிடம் சொல்லவேயில்லை” என்றார்.