தாய்லாந்து நாட்டில் கடந்த 4-ஆம் தேதி அன்று உயிரிழந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இரங்கல் சர்ச்சையை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
அப்படி என்ன சொன்னார் சுனில் கவாஸ்கர்?
“வார்னேவின் மரண செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கிரிக்கெட் விளையாட்டுக்காக அவரது பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். ஆனால் அதே நேரத்தில் அவரை தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் என சொல்லிவிட முடியாது. என்னைக் கேட்டால் அவரைவிட இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர்தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்.
இந்தியாவுக்கு எதிராக வார்னே விக்கெட் வீழ்த்திய சிறந்த ரெக்கார்டும் இல்லை. அவரது வாழ்க்கை முறைதான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என கருதுகிறேன்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 708 டெஸ்ட் விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணிக்காக கைப்பற்றியவர் ஷேன் வார்னே. கவாஸ்கரின் கருத்துக்கு சமூக வலைதள பயனர்கள் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.