விளையாட்டு

"ஐபிஎல் சீசன் 13-ல் நடராஜன் தான் என் ஹீரோ!" - வியந்து நெகிழ்ந்த கபில் தேவ்!

EllusamyKarthik

``இந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் தான் என் ஹீரோ. அவர் அச்சமின்றி பல யார்க்கர்களை வீசினார்" என்று கபில் தேவ் வியந்து நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். 

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் தமிழக வீரர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளனர். தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியை திணறடித்தார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. அதேபோல், தனது 'யார்க்கர்' பௌலிங்கால் மிரட்டினார் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன். 

இருவருக்கும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்த நிலையில், வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விளையாட முடியவில்லை. அதேநேரத்தில் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்றுள்ளார்.

ஓவரின் ஆறு பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் பெற்ற நடராஜனின் பந்துவீச்சை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை பெற்று தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், நடராஜனை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். 

இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``இந்த ஐபிஎல் தொடரில் நடராஜன்தான் என் ஹீரோ. அந்தப் பையன் அச்சமின்றி பல யார்க்கர்களை வீசினார். இன்று மட்டுமல்ல, கடந்த 100 ஆண்டுகளில்கூட இது சிறந்த யார்க்கர் பந்துவீச்சு. கடந்த 100 வருடங்களில் இவர் போல் அருமையான யார்க்கர் பந்தை யாரும் வீசவில்லை. பயமில்லாமல் அருமையாக யார்க்கர் பந்து வீசுகிறார்" என்று நெகிழ்ந்து பேசியுள்ளார் கபில் தேவ்.

கபில்தேவைபோல, ஏற்கெனவே விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோர் நடராஜனை வெகுவாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடராஜன் இந்த 13 வது சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2017-ல் முதலில் நடராஜன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக 3 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், அந்தத் தொடரில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை. 

இந்த சீசனில், யார்க்கர்களை வீசுவதற்கான தனது திறனை வெளிக்கொணர்ந்தார். குறிப்பாக, டெத் ஓவர்களில் எஸ்.ஆர்.எச் அணிக்கு பெரிதும் கைகொடுத்து கவனம் ஈர்த்தார். நல்ல யார்க்கர்களை வீசுவதற்கான அவரது திறமை இந்திய தேர்வாளர்கள் உட்பட பலரின் கவனத்தை ஈர்த்தது. இதனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.