விளையாட்டு

ஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

ஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

webteam

சாப்பாட்டிற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ரூபாய் 7 லட்சம் பில் செலுத்தியது ட்விட்டர் வாசிகளின் கண்களை வியக்க வைத்துவிட்டது.

நன்றாக சாப்பிடலாம் என நினைத்து ஹோட்டலுக்கு தனியாக செல்வோருக்கு ரூபாய் 500-லிருந்து ஆயிரம் வரை பில் வரும். அதற்கே நம் வயிறு நன்றாக நிறைந்துவிடும். குடும்பமாகவே, அல்லது நண்பர்களுடனோ செல்லும் பட்சத்தில் ஆயிரக்கணக்கில் வரும். வயிறு ஒரு பக்கம் நிறைந்தாலும் பில்லை கண்டால் நம் கண்கள் தள்ளிவிடும். ஆனால் இங்கோ, ஒருவேளை சாப்பாட்டிற்காக ரூபாய் 7 லட்சத்தை பணமாக செலுத்தியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக உள்ளார். இவர் ஒருவேளை சாப்பாட்டிற்காக ரூபாய் 7 லட்சத்தை செலுத்தியுள்ளார். அதற்கான ரசீதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒருவேளை சாப்பாட்டிற்கே இவ்வளவு பணம் கட்டியிருக்கிறாரா..? என வியந்த ட்விட்டர் வாசிகள் அதனை விவாதப் பொருளாகவே மாற்றிவிட்டனர். அப்படி என்னதான் ஹோட்டலில் சாப்பிட்டார்..? ரூபாய் 7 லட்சத்திற்கு என்ன சாப்பாடு இருக்கு..? என ஆராயவும் தொடங்கிவிட்டனர். ரசீதை தீவிரமாக ஆராய்ந்தபோதும் அதில் பெருசாக சொல்லிக் கொள்ளும்படி எந்த உணவு வகைகளும் இல்லை. பன்னீர் பட்டர், பன்னீர் டிக்கா, வெஜ் கேபன் உள்ளிட்ட வணவு வகைகள் தான் இருந்தன. உயர்தர ஹோட்டலாகவே இருந்தாலும் இவ்வளவு பணம் எப்படி வந்தது என தங்களது தேடலை ட்விட்டர் வாசிகள் மேலும் விரிவுபடுத்திய போதுதான், ஆகாஷ் சோப்ராவின் ஏமாற்றும் திட்டம் மக்களுக்கு தெரியவந்திருக்கிறது.

ஆகாஷ் சோப்ரா சுற்றுலாவிற்காக இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளார். அங்கு சாப்பிட்ட ரசீதை தான் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அங்கு இந்திய ரூயாய் 1-ன் மதிப்பு 210 ரூபாய் 20 பைசாவாகும். அங்குள்ள மதிப்பின்படி தான் அவர் ரூபாய் 7 லட்சத்தை செலுத்தியுள்ளார். அதனை இந்திய ரூபாய் மதிப்பின் படி பார்த்தால் ரூபாய் 3,334 தான் ஆகும். மக்களை ஏமாற்றவே அவர் இவ்வாறு செய்திருக்கிறார். கில்லாடியான மக்களும் ஆகாஷ் சோப்ராவின் திட்டத்தை நச்சென்று கண்டுபிடித்துவிட்டனர்.