கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித்தவித்து வரும் இந்தியாவின் இந்த துயர நிலைக்கு காரணம் இந்திய அரசின் மெத்தனபோக்குதான் என சர்வதேச பத்திரிகைகள் அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்தன. அதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன்.
“கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை அறியாமல் சில சர்வதேச ஊடகங்கள் ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து கொண்டு விமர்சித்து வருகின்றன. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதில் நிறைய சவால்கள் உள்ளன.
இந்தியா முழுவதும் நான் பயணித்திருக்கிறேன். குறிப்பாக தமிழகத்தை எனது ஆன்மிக இல்லமாகவே நான் கருதுகிறேன். இவ்வளவு பெரிய நாட்டை வழிநடத்தி வரும் தலைவர்கள் மீது எப்போதுமே எனக்கு மரியாதை அதிகம் உண்டு.
இந்தியாவில் நான் செல்லும் இடமெல்லாம் அங்குள்ள மக்கள் என் மீது அன்பு செலுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்திய மக்கள் தற்போது சிக்கியுள்ள இந்த அவல நிலையை கண்டு எனது மனம் கனக்கிறது” என ஹைடன் தெரிவித்துள்ளார்.