விளையாட்டு

சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே ஆவணப்படம் - ஸ்ட்ரீம் செய்யவுள்ள புக் மை ஷோ!

EllusamyKarthik

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானுமான ஷேன் வார்னே குறித்த ஆவணப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது BookMyShow. ‘ஷேன்’ என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் இந்தியாவில் ஸ்ட்ரீமாக உள்ளது. வார்னேவின் வாழ்க்கை கதை மற்றும் அவரது கிரிக்கெட் கெரியர் குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளது. 

இந்த ஆவணப்படம் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவுடன் தனக்குள்ள பிணைப்பு குறித்தும், ராஜஸ்தான் அணிக்காக முதலாவது ஐபிஎல் சீசனில் கோப்பை வென்றது குறித்தும் ஷேன் வார்னே தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. அதோடு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் உடனான நட்பு குறித்தும் வார்னே பேசி உள்ளதாக தெரிகிறது.  

“எனது ஆவணப்படம் புக் மை ஷோவில் வெளியாக உள்ளதை எண்ணி நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். எனது பயணத்தில் முக்கியமான அங்கம் வகித்த நபர்களின் பேட்டி மற்றும் கிரிக்கெட் கெரியரில் நான் அடைந்த உச்சம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளேன்” என வார்னே தெரிவித்துள்ளார். 

இந்த ஆவணப்படத்தை சந்தா செலுத்தி பார்க்கும் பார்வையாளர்களுக்காக பிரத்யேக போட்டி ஒன்றையும் புக் மை ஷோ நடத்துகிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.